Saturday, September 3, 2011

துலுக்க நாச்சியார் !!!

 இந்தியாவின் மிகப்பெரிய வழிபாடான திருமால் நெறியின் வளச்சிக்கு இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தன் பங்கை செலுத்தியுள்ளது. வங்க நாடு திருமாலோடு ராதையையும் தமிழகத்தின் வைணவம் ஆண்டாளை திருமாலுக்கு இணையாகவும் சேர்த்தது.. 

  இஸ்லாத்தின் செல்வாக்கால் தமிழ் வைணவத்தில் துலுக்க நாச்சியார் கதை பிறந்தது!!!!

 மதுரை அழகர்கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவில் அழகரை பற்றிய கதை ஒன்று உள்ளது. 'தன் தங்கை மீனாட்சி திருமணத்தை காண வரும் அழகர் கோபித்துகொண்டு வண்டியூர் சென்று அங்கு தன் காதலி துலுக்க நாச்சியார் வீட்டில் தங்குகிறார்' என்பது கதையாகும். 

   ஆனால் உண்மையில் அங்கு துலுக்க நாச்சியார் கோவில் ஏதும் இல்லை.கதை மட்டும் வலிமை உடையதாக உள்ளது.. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை வண்டியூர் பகுதியில் இஸ்லாமியர் வானவேடிக்கை நடத்தி அழகரை வரவேற்று உள்ளனர்.. 

  திருவரங்கத்தில்  துலுக்க நாச்சியார் கதையும் ஒரு சன்னதியும் உள்ளது. திருமாலின் சிலை மீது ஆசைகொண்ட சுல்தான் மகளொருத்தி அந்தசிலையை பிரிந்த சோகத்தில் உயிர்விட்டாலாம்.. இந்த கதையை குறிப்பிடும் திருவரங்கம் கோவில் ஒழுகு, "பெருமாள் நியமனத்தினாலே ராஜமகேந்திரன் திருவீதியில் வடகீழ் மூலையில் திருநடை மாளிகையிலே அறையாகத் தடுத்து அந்த டில்லிச்வரன் புத்திரியான ஸ்ரதானியை சித்ரருபமாக எழுதி வைத்து பிரதிஷ்டிப்பித்து" என்று கூறுகிறது.

இசுலாமியர் அல்லாத தமிழர்கள் நாகூருக்கு சென்று வழிபடுவதை போல விருத்தாசலம் அடுத்த ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோயிலில் நெடுங்காலமாக இசுலாமியர்கள் வழிப்பட அனுமதிக்கப் படுகிறார்கள். இது பலர் அறியாத செய்தியாகும். அக்கோவில் இறைவன் கடலாடச் செல்லும்போது கிள்ளை என்னுமிடத்தில் அமைந்துள்ள தர்காவிற்கு கோவில் மரியாதையாக மாலை தருகிறார்கள்.

மத அடிப்படைவாதம் வன்மத்தோடு வளர்க்கப்படும் இந்நாளில் இஸ்லாத்துக்கும் வைணவத்துக்கும் உள்ள பழம்பெருமை நாம் தெரிந்து கொள்ளவேண்டியவை..

Tuesday, August 16, 2011

ஆடி மாதம் வைக்கப்படும் கூழ்-???

நம்முடைய  முன்னோர்கள் உருவாக்கிய பழக்க வழக்கங்கள் அனைத்திற்கும் காரணங்கள் பல உண்டு..  
அது போல், ஆடி மாதம் வைக்கப்படும் கூழிற்கும் காரணம் உண்டு.. தினத்தந்தி யின் ஆன்மீக இதழில் இருந்து...

  சூரியன் தன் கதிர்வீச்சு திசையை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றுகிறது. அதன்படி ஆடி மாதத்தில் சூரியக் கதிர்கள் திசை மாறுகிறது. 
இந்தியாவை பொறுத்தவரை உஷ்ணம் நிறைந்த கோடைக் காலம் ஈரப்பதம் நிறைந்த குளிர் காலமாக மாறுகிறது.. இத்தருணத்தில் வைரஸ் போன்ற கிருமிகளால் ஏற்படும் நோய்கள் அதிக அளவில் பரவும் என்பது அறிவியல் சொல்லும் செய்தி.. 

அதன்படி ஆடி ஆடிமாதத்தில் சின்ன அம்மை, தட்டம்மை அதிக அளவில் பரவும். அப்படி வரக்கூடிய கிருமிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதற்கே கேழ்வரகு கூழ் உற்றும் வழக்கத்தை கொண்டு உள்ளனர். 

இந்த கூழ் உடலை குளிர்விக்க கூடிய உணவு மற்றும் அருமருந்தும். 
இரும்பு சத்தும் ,கால்சியம், நார்ச்சத்து ஆகியவை இதில் உள்ளது..

    அம்மைகளில் இருந்து காக்கும் கடவுளாக நாம் நம்புவது மாரியம்மனை. இவரை வணங்கி கூழ் உற்றுவதின் மூலம் அம்மை உஷ்ணத்தில் இருந்து காத்துக்கொண்டுள்ளனர். 

  மேலும், கூழ் பானையை சுற்றி மஞ்சளும் வேப்பிலையும் வைப்பார்கள்.. இவையும் கிருமி நாசியே.. நோய் பரவாமல் தடுக்கும். 

 நம் முன்னோர்களின் பழக்கங்கள் ஏதும் கண்மூடித்தனமானது அல்ல. காரணங்களை அலசினால் விளக்கங்கள் ஆச்சரியமூட்டும்..

Sunday, May 29, 2011

செல்லமா பாரதி

சின்ன பிள்ளையா இருக்கும் போதே பாரதியை படிக்கவும் ரசிக்கவும் ஆரம்பிச்சிட்டேன்..  ஆனால் பாரதி படம் பார்த்ததுக்கு அப்புறமோ என்னவோ செல்லமாவை அதிகம் ரசிக்க ஆரம்பிச்சிட்டேன்..
பாரதி மாதிரி ஒருத்தர் கூட இவ்ளோ நாள் வாழ முடிஞ்சி இருக்கே.. அதுவே பெரிய விஷயம்...
ஆச்சரியம் இல்லாமல் பாரதி ஒரு உயர்ந்த மனிதர்.. ஆனால் ஒரு வீம்புக்கார கவிஞருடன் வாழும் போதும் சரி, வீட்டில் பணம் இல்லாமல் போகும் போதும் சரி, பாரதி தவறான பாதையில் செல்லும் போதும் சரி, பாரதி மீது அவர் கொண்ட காதலும் சரி..
இப்போ ஏன் திடீர்னு செல்லமா பத்தி எழுதிரேனா, அதுக்கு காரணம் வாலிபக் கவிஞர் வாலியும் என்றும் இளமை அனந்த விகடனும்.. போன வாரம் வந்த விகடன்ல நினைவு நாடாக்கள்ல செல்லமா பத்தி அவர் எழுதினது...
பாரதியின் சீடன் என்பதால் பாரதிதாசன் செல்லமாவை புகழலாம்... ஆனால் மேத்தாவின் கருத்து தான் என்னுடையதும் ..
"ஒரு ஞானக் கிறுக்கனோடு குடித்தனம் நடத்திய குணவதி அல்லவா அந்த அம்மாள்.. அது அவ்வளவு இலேசுப்பட்ட காரியமா என்ன?"
உண்மையான வார்த்தைகள்...  :) 

இப்போலாம் சும்மாவே சமோசா வாங்குற மாதிரி இரண்டு மாசத்தில விவாகரத்து வாங்கும் மக்களுக்கு நடுவில் செல்லமா ஓர் நிறைவான உதாரணம்...
எந்த ஒரு சாதனை மனிதனுக்கு பின் இந்த மாதிரி ஒரு பெண் இருப்பதால் தான் குடும்பம் நடக்குது, சாதனையும் நடக்குது..