இந்தியாவின் மிகப்பெரிய வழிபாடான திருமால் நெறியின் வளச்சிக்கு இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தன் பங்கை செலுத்தியுள்ளது. வங்க நாடு திருமாலோடு ராதையையும் தமிழகத்தின் வைணவம் ஆண்டாளை திருமாலுக்கு இணையாகவும் சேர்த்தது..
இஸ்லாத்தின் செல்வாக்கால் தமிழ் வைணவத்தில் துலுக்க நாச்சியார் கதை பிறந்தது!!!!
மதுரை அழகர்கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவில் அழகரை பற்றிய கதை ஒன்று உள்ளது. 'தன் தங்கை மீனாட்சி திருமணத்தை காண வரும் அழகர் கோபித்துகொண்டு வண்டியூர் சென்று அங்கு தன் காதலி துலுக்க நாச்சியார் வீட்டில் தங்குகிறார்' என்பது கதையாகும்.
ஆனால் உண்மையில் அங்கு துலுக்க நாச்சியார் கோவில் ஏதும் இல்லை.கதை மட்டும் வலிமை உடையதாக உள்ளது.. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை வண்டியூர் பகுதியில் இஸ்லாமியர் வானவேடிக்கை நடத்தி அழகரை வரவேற்று உள்ளனர்..
திருவரங்கத்தில் துலுக்க நாச்சியார் கதையும் ஒரு சன்னதியும் உள்ளது. திருமாலின் சிலை மீது ஆசைகொண்ட சுல்தான் மகளொருத்தி அந்தசிலையை பிரிந்த சோகத்தில் உயிர்விட்டாலாம்.. இந்த கதையை குறிப்பிடும் திருவரங்கம் கோவில் ஒழுகு, "பெருமாள் நியமனத்தினாலே ராஜமகேந்திரன் திருவீதியில் வடகீழ் மூலையில் திருநடை மாளிகையிலே அறையாகத் தடுத்து அந்த டில்லிச்வரன் புத்திரியான ஸ்ரதானியை சித்ரருபமாக எழுதி வைத்து பிரதிஷ்டிப்பித்து" என்று கூறுகிறது.
இசுலாமியர் அல்லாத தமிழர்கள் நாகூருக்கு சென்று வழிபடுவதை போல விருத்தாசலம் அடுத்த ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோயிலில் நெடுங்காலமாக இசுலாமியர்கள் வழிப்பட அனுமதிக்கப் படுகிறார்கள். இது பலர் அறியாத செய்தியாகும். அக்கோவில் இறைவன் கடலாடச் செல்லும்போது கிள்ளை என்னுமிடத்தில் அமைந்துள்ள தர்காவிற்கு கோவில் மரியாதையாக மாலை தருகிறார்கள்.
No comments:
Post a Comment